சந்தேகத்தால் விபரீதம்.. மனைவியை உயிருடன் எரித்து கொன்ற நபர் - மகளையும் தீயில் தள்ளிவிட்ட கொடூரம்

குழந்தைகள் முன்னிலையிலேயே அவர்களின் தாயை வெங்கடேஷ் உயிருடன் எரித்துள்ளார்.;

Update:2025-12-27 11:18 IST

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஹசுராபாத் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் திரிவேணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் வெங்கடேஷ் தனது மனைவி மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது துன்புறுத்தல்களை தாங்க முடியாமல் திரிவேணி அண்மையில் தனது பெற்றோர் வீட்டிற்கு கிளம்பிச் சென்றுவிட்டார். பின்னர் வெங்கடேஷ் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, இனி சண்டை போட மாட்டேன் என உத்தரவாதம் அளித்து திரிவேணியை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால் வீட்டிற்கு வந்து சில நாட்களில் மீண்டும் திரிவேணியுடன் வெங்கடேஷ் சண்டை போடத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வெங்கடேஷ் தனது மனைவி திரிவேணியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் திரிவேணியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். குழந்தைகள் முன்னிலையிலேயே அவர்களின் தாயை வெங்கடேஷ் உயிருடன் எரித்துள்ளார்.

இதனை தடுக்கச் சென்ற அவரது மகளையும் தீயில் தள்ளிவிட்டுள்ளார். இதனால் அந்த பெண் குழந்தைக்கும் உடலில் மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், திரிவேணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வேகமாக ஓடி வந்தனர். இதற்குள் வெங்கடேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். திரிவேணியும், அவரது மகளும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திரிவேணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான வெங்கடேஷை, போலீசார் 12 மணி நேரத்திற்குள் தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்