2 பிள்ளைகளையும் ஆற்றில் வீசி கொன்று தந்தை தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
இவர் நாகவேணி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.;
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் மாளிகைபுரம் மண்டல் பகுதியை சேர்ந்தவர் துர்கபிரசாத் (வயது 37). இவர் நாகவேணி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு மோகித் (வயது 13) என்ற மகனும், ஜான்வி (வயது 9) என்ற மகளும் இருந்தனர். குவைத்தில் வேலை செய்து வந்த துர்கபிரசாத் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார்.
இந்நிலையில், துர்கபிரசாத் இன்று தனது 2 பிள்ளைகளையும் லக்காவரம் பகுதியில் கோதாவரி ஆற்றுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 2 பிள்ளைகளையும் கோவாதரி ஆற்றுக்குள் வீசி கொன்றுவிட்டு, துர்கபிரசாத்தும் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இதைக்கண்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 2 பிள்ளைகளையும் ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டு தந்தையும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.