‘அந்தமான் நிகோபார் தீவுகளின் பெயரை மாற்ற வேண்டும்’ - பிரதமருக்கு கே.கவிதா கோரிக்கை
'ஆசாத் ஹிந்த்' என்ற பெயர் சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்களிப்பை நினைவுகூரும் என கே.கவிதா தெரிவித்துள்ளார்.;
ஐதராபாத்,
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை கவுரவிக்கும் விதமாக அந்தமான் நிகோபார் தீவுகளின் பெயரை ‘ஆசாத் ஹிந்த்’ என்று மாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியின் மகளும், தெலுங்கானா ஜக்ருதி கட்சியின் தலைவருமான கே.கவிதா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-
“நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் டிசம்பர் 30, 1943 அன்று போர்ட் பிளேரில் தேசியக் கொடியை ஏற்றி, ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட முதல் இந்திய பிரதேசமாக அந்தமான் நிகோபார் தீவுகளை அறிவித்தார். அத்தீவுகளுக்கு ஷாஹீத் தீவு மற்றும் ஸ்வராஜ் தீவு என்று நேதாஜி பெயரிட்டார்.
சமீபத்திய ஆண்டுகளில் அங்குள்ள சில தீவுகளின் பெயர்கள் மாற்றப்பட்டாலும், தீவுக்கூட்டத்தின் கூட்டு அடையாளம் ஆங்கிலேய ஆட்சியின் நினைவை தொடர்ந்து தாங்கி வருகிறது. 'ஆசாத் ஹிந்த்' என்ற பெயர் இந்தியாவின் முதல் இறையாண்மையை குறிக்கிறது. அது சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்களிப்பை என்றென்றும் நினைவுகூரும்.
எனவே அந்தமான் நிகோபார் தீவுகளின் பெயரை ‘ஆசாத் ஹிந்த்’ என்று மாற்ற வேண்டும். இந்த பெயர் மாற்றம் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும், கலாச்சார உணர்வை வலுப்படுத்தும் மற்றும் இந்தியாவின் புவியியலை அதன் சுதந்திர இயக்க வரலாற்றுடன் இணைக்கும். மாற்றத்தை செயல்படுத்த தேவையான அரசியலமைப்பு மற்றும் நிர்வாக செயல்முறைகளை மத்திய அரசு தொடங்க வேண்டும். இதுவே நேதாஜியின் தைரியம் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.