பரஸ்பர ஒப்புதலுடன் உல்லாசத்தில் ஈடுபடுவது கற்பழிப்பு ஆகாது: கர்நாடக ஐகோர்ட்டு கருத்து
ஒரு பெண்ணுக்கும், வக்கீலுக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.;
பெங்களூரு,
பெங்களூருவில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும், வக்கீலுக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் பெண்ணை திருமணம் செய்வதாக வக்கீல் கூறினார். மேலும் அந்த பெண்ணுடன் கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து 2 ஆண்டுகள் வக்கீல் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அந்த பெண்ணை திருமணம் செய்ய வக்கீல் மறுத்து விட்டார்.
அத்துடன் வக்கீலுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க குடும்பத்தினரும் முயற்சித்தனர். இதுதொடர்பாக அந்த வக்கீல் மீது பெண் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசில் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தன்மீது பதிவான கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வக்கீல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது திருமண ஆசைவார்த்தை கூறி, 2 பேரும் பரஸ்பர ஒப்புதலுடன் உல்லாசத்தில் ஈடுபடுவது கற்பழிப்பு ஆகாது. இதனை சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் சுட்டிக்காட்டி தீர்ப்பும் கூறி இருப்பதை இந்த நேரத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி, குழந்தைகளும் உள்ளனர். இதனை அவரே புகாரில் கூறி உள்ளார். எனவே திருமண ஆசை வார்த்தை கூறி தன்னை வக்கீல் கற்பழித்ததாக கூறுவதை ஏற்க முடியாது. அதனால் வக்கீல் மீது பதிவான கற்பழிப்பு வழக்கை ரத்து செய்வதுடன், அவர் மீது கீழ் கோர்ட்டில் நடக்கும் விசாரணையும் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி நாகபிரசன்னா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.