200 பவுன் கொடுத்தும், அதிக வரதட்சணை... இளம்பெண் தாயுடன் சயனைடு தின்று தற்கொலை

நகை மற்றும் வீடு சீர்வரிசையாக பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளை வீட்டாருக்கு வழங்கப்பட்டது.;

Update:2026-01-23 20:22 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கமலேஸ்வரத்தை சேர்ந்தவர் ராஜீவ். இவர் வேளாண்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி சஜிதா (வயது 54), மகள் கிரீமா (30). கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த உன்னி கிருஷ்ணனுக்கும், கிரீமாவுக்கும் திருமணம் நடந்தது. 200 பவுன் நகை மற்றும் வீடு சீர்வரிசையாக பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளை வீட்டாருக்கு வழங்கப்பட்டது.

ஆனால் மாப்பிள்ளை வீட்டார், அதில் திருப்திபடவில்லை. திருமணத்திற்கு பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு உன்னி கிருஷ்ணன், கிரீமாவை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக தகராறு வலுத்த நிலையில் திருமணம் முடிந்த 25-வது நாளிலேயே மனைவியை விட்டு உன்னி கிருஷ்ணன் பிரிந்ததோடு, வெளிநாடு சென்று விட்டார்.

அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. கிரீமாவுடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். எப்படியும் மனம் திருந்தி மருமகன் உன்னி கிருஷ்ணன் வருவார், தனது மகளுடன் வாழ்வார் என்ற நம்பிக்கையில் சஜிதா இருந்தார். அவரது மகள் கிரீமாவையும் சமாதானப்படுத்தி வந்தார். ஆனால் மருமகன் உன்னிகிருஷ்ணனின் பிடிவாதத்தால் அவமானமே மிஞ்சியதாக தெரிகிறது.

இதற்கிடையே கடந்த 3 மாதத்துக்கு முன்பு ராஜீவ் திடீரென இறந்து விட்டார். இதனால் தாயும், மகளும் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலைக்கு சென்றனர். இதற்கிடையே உன்னி கிருஷ்ணனின் உறவினர் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க உன்னி கிருஷ்ணன் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த சஜிதா, கிரீமாவுடன் அங்கு சென்றுள்ளார்.

அப்போது உறவினர்கள் கிரீமாவையும், உன்னி கிருஷ்ணனையும் சேர்த்து வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. மேலும் உன்னி கிருஷ்ணன் அவதூறாக பேசியதாகவும் தெரிகிறது. அதன்பிறகு தாயும், மகளும் வேதனையில் வீடு திரும்பினர். இவ்வாறு ஒவ்வொரு சம்பவமும் மனஅழுத்தத்தையே தந்ததால் இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.

சம்பவத்தன்று உறவினர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் தற்கொலை செய்யப்போவதாக தகவல் கூறி விட்டு இருவரும் சயனைடு தின்று வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேருடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சாவதற்கு முன்பு சஜிதா எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் கூறியிருப்பதாவது:-

எனது மகளுடன் திருமணம் முடிந்து 25 நாட்கள் மட்டுமே உன்னி கிருஷ்ணன் வாழ்ந்தார். பின்னர் உடுத்த ஆடையை கழற்றி வீசுவது போல், எனது மகளை தனிமைப்படுத்தி விட்டு சென்ற உன்னி கிருஷ்ணன் இதுவரை வீட்டுக்கு வரவில்லை. மகள் பல முறை கெஞ்சி அழுதும் பயனில்லை. திருமணத்தின் போது தேவைக்கு அதிகமாகவே வரதட்சணை வழங்கப்பட்டது.

இனி எங்களுக்கு வாழ பிடிக்கவில்லை. நாங்கள் இறந்த பிறகு, எங்களது சொத்துக்களில் ஒரு கைப்பிடி மண்ணை கூட உன்னி கிருஷ்ணனோ, அவர்களது உறவினர்களோ அனுபவிக்கக் கூடாது. எங்களது சொத்துக்களை எனது சகோதரர்களுக்கு கொடுப்பது தான் நல்லது. எனது மகளுக்கும், அதில் சம்மதம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் இதுதொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக உன்னி கிருஷ்ணன் மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த உன்னி கிருஷ்ணன் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமிட்டார். இதற்காக மும்பை விமான நிலையத்துக்கு சென்ற அவர் அங்கிருந்து வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற நிலையில் திருவனந்தபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்