பெங்களூரு விமான நிலையத்தில் பிரபல ஓட்டலில் வாங்கிய பொங்கலில் புழு கிடந்ததால் பரபரப்பு

பொங்கலில் புழு கிடந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;

Update:2025-07-25 04:56 IST

.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் ராமேஸ்வரம் கபே என்ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் ஒரு பெண் விமான பயணி நேற்று காலை பொங்கல் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது அதில் புழு ஒன்று செத்து கிடந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணி, அதனை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதையடுத்து அந்த பயணி, பொங்கலில் புழு கிடந்தது பற்றி ஓட்டல் ஊழியர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அவ்வாறு பொங்கலில் புழு இருக்க வாய்ப்பே இல்லை என கூறி ஊழியர்கள் மறுத்ததுடன், இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்று அந்த பயணியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பயணி, பொங்கலில் புழு கிடந்ததை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த வீடியோ ஆதாரத்தை காட்டினார். இதையடுத்து மன்னிப்பு கேட்ட ஓட்டல் ஊழியர்கள், அந்த உணவுக்கான கட்டணம் ரூ.300-ஐ திரும்ப கொடுத்து பயணியை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதற்கிடையே பொங்கலில் புழு கிடந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே ராமேஸ்வரம் கபே உரிமையாளர் தரப்பில், விமான நிலைய போலீசில் பயணி மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். அதில், எங்கள் ஓட்டலில் வாங்கிய பொங்கலில் புழு கிடப்பதாக கூறி ஒரு செல்போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது என்னிடம் பேசிய அந்த நபர் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டினார். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே ராமேஸ்வரம் கபே ஓட்டலின் ஒயிட்பீல்டில் உள்ள கிளையில் தான் கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் வெடிகுண்டு வெடித்து, இந்த ஓட்டல் பிரபலமானது நினைவுகூரத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்