‘பீகாரிலும் வாக்குகளை திருட முயற்சி செய்வார்கள்’ - ராகுல் காந்தி

வாக்குகளைப் பெறுவதற்காக பிரதமர் மோடி எதை வேண்டுமானாலும் செய்வார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.;

Update:2025-10-29 18:08 IST

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ‘மகாகத்பந்தன்’ கூட்டணி ஆகிய 2 கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி(ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் ‘மகாகத்பந்தன்’ கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முசாபர்பூர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“பிரதமர் மோடிக்கு உங்கள் வாக்குகள் மட்டுமே தேவை. உங்கள் வாக்குகளைப் பெறுவதற்காக நாடகம், நடனம் என எதை வேண்டுமானாலும் அவர் செய்வார். அவர்கள் வாக்குகளை திருடுவதில் கவனமாக இருக்கின்றனர். தேர்தல்களை முடித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் அவர்கள் வாக்குகளை திருடினார்கள், அதே போல் அரியானாவிலும் வாக்குகளை திருடினார்கள். தொடர்ந்து பீகாரிலும் வாக்குகளை திருட முயற்சி செய்வார்கள். இன்று மக்களுக்கு கிடைத்திருக்கும் கல்வி, வாக்குரிமை உள்ளிட்ட அனைத்தும் அரசியல் சட்டத்தால் கிடைத்தது. பிரதமர் மோடியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அந்த அரசியலைப்பு சட்டத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்குள் நுழைந்து, பின்னர் அந்த அமைப்புகளின் தலைவர்களாக ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமனம் செய்கிறார்கள். நாங்கள் அரசியலைப்பு சட்டத்தை பாதுகாப்போம். யாராலும் அதை அழிக்க முடியாது.”

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்