வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற சிறுத்தை

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.;

Update:2025-11-30 21:49 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்டம் நிவால்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் குணவதி. இவருக்கு திருமணமாகி 1 வயதில் ரோகித் என்ற பச்சிளம் குழந்தை இருந்தது.

இந்நிலையில், குணவதி நேற்று இரவு தனது வீட்டில் கணவர், குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டிற்குள் சிறுத்தை நுழைந்துள்ளது. அந்த சிறுத்தை தாய் அருகே உறங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தை ரோகித்தை கடித்து தூக்கிச்சென்றது. தனது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு குணவதி கண்விழித்துள்ளார். அப்போது குழந்தையை சிறுத்தை கடித்துக்கொண்டு சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கூச்சல் எழுப்பிய குணவதி தனது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையை துரத்தி சென்றுள்ளார்.

ஆனால், சிறுத்தை குழந்தையை தனது வாயில் கவ்விக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. இது குறித்து உடனடியாக போலீசார், வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, கிராமத்திற்கு அருகே வனப்பகுதியில் பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. குழந்தையை சிறுத்தை கடித்துக்கொன்றது உறுதியானது. இதையடுத்து குழந்தையின் உடலை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்