ஐதராபாத்தில் சோகம்; ஒரே குடும்பத்தினர் 5 பேர் மர்ம மரணம்
ஐதராபாத்தில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை தெரியவரும் என போலீசார் கூறினர்.;
கலபுரகி,
கர்நாடகாவில் கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா ரஞ்சோலா கிராமத்தில் வசித்து வந்தவர் நரசிம்மா (வயது 60). இவரது மனைவி வெங்கடம்மா (வயது 55). இவர்களின் மகன் அனில்(32), மகள் கவிதா(24), பேரன் அப்பு(2). நரசிம்மா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஐதராபாத்துக்கு குடிபெயர்ந்து அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டு விட்டு வீட்டில் படுத்து தூங்கினர். நேற்று காலையில் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு நரசிம்மா, அவரது மனைவி வெங்கடம்மா, மகன் அனில், மகள் கவிதா, பேரன் அப்பு ஆகிய 5 பேரும் உயிரிழந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மியாபுரா போலீசார் அவர்கள் 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அவர்கள் நரசிம்மா உள்பட 5 பேரின் உடல்களையும் ரஞ்சோலா கிராமத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் கிராமத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி 5 பேரின் உடல்களையும் அடக்கம் செய்தனர். உணவில் விஷம் கலந்து 2 வயது குழந்தைக்கு கொடுத்து கொன்றுவிட்டு நரசிம்மாவும், அவரது குடும்பத்தினரும் அதே உணவை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது அவர்களை யாரேனும் கொலை செய்தார்களா? என்பது தெரியவில்லை.
அவர்களுடைய மர்ம மரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அதுபற்றி தெரியவரும் என்று போலீசார் கூறினர். இந்த சம்பவம் ரஞ்சோலா கிராமத்தில் பெருத்த சோகம் ஏற்படுத்தி உள்ளது.