உ.பி.: 21-வது மாடியில் இருந்து குதித்து பயிற்சி டாக்டர் தற்கொலை

2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில், மனநல பாதிப்புகளை முன்னிட்டு படிப்பை கைவிட்டார் என கூறப்படுகிறது.;

Update:2025-09-30 02:04 IST

லக்னோ,

உத்தர பிரதேசம் மாநிலம் மதுரா நகரை சேர்ந்தவர் சிவா (வயது 29). டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். நொய்டாவில் உள்ள ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்த அவர், அதே பகுதியில் உள்ள கவுர் சிட்டி பகுதியில், தனது சகோதரி குடும்பத்தினர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் அவர்களோடு தங்கியிருந்தபடி பணிக்கு சென்று வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சிவா தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிவா தனது சகோதரி வசித்து வரும் குடியிருப்பின் 21-வது மாடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.

அப்போது, வேறொரு அறையில் அவருடைய பெற்றோர் இருந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும் அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

2015-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிக்க தொடங்கிய அவர் 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில், மனநல பாதிப்புகளை முன்னிட்டு படிப்பை கைவிட்டார் என கூறப்படுகிறது. அவரிடம் இருந்து தற்கொலை குறிப்பு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்