நாள் முழுவதும் கரண்ட் கட் : ஏடிஎம்-ல் தஞ்சம் அடைந்த குடும்பம்
மின்சாரத் துறையினர் எங்களுக்கு எந்த முறையான தகவலையும் கொடுப்பதில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.;
லக்னோ,
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில் வசித்து வரும் ஜெயந்தி குஷ்வாஹா (35) என்ற பெண் தனது 10, 14 மற்றும் 16 வயதுடைய மூன்று சிறுவர்களுடன் ஒரு ஏடிஎம் மையத்திற்குள் தஞ்சம் அடைந்துள்ளார். இவர்களுடன் மற்றொரு பெண்ணும் அந்த ஏடிஎம் மையத்தில் ஓய்வெடுக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் ஏன் தனது குழந்தைகளுடன் ஏடிஎம் மையத்தில் தஞ்சம் அடைந்தார் என்பது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
நாங்கள் எங்கே செல்வது? குறைந்தபட்சம் இங்கே மின்சாரம் இருப்பதால் நாங்கள் இங்கே வந்தோம். இரவு, பகல் என எப்போதும் எங்களுக்கு மின்சாரம் இல்லை.
நாள் முழுவதும் கரண்ட் கட் பிரச்சினை இருக்கிறது. எப்போது வருகிறது, எப்போது செல்கிறது என்று தெரியவில்லை. எனவே, நாங்கள், என் முழு குடும்பத்துடன், வெப்பத்திலிருந்து சிறிது ஓய்வு பெற இங்கே ஓய்வெடுக்கிறேன். மின்சாரத் துறையினரும் எங்களுக்கு எந்த முறையான தகவலையும் கொடுப்பதில்லை. என்னால் என் குழந்தைகளை வீதிகளில் உறங்க வைக்க முடியாது. எனவே நாங்கள் இங்கே ஏடிஎம்மில் இருக்கிறோம் எனத் தெரிவித்தார். மின்வெட்டால் அவதியுற்று குழந்தைகளுக்காக ஏடிஎம் மையத்தில் பெண் தங்கியிருப்பது, சமூக வளைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பலரும், உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் 'ஊழல் மற்றும் திறமையற்றது' என்று விமர்சித்து வருகின்றனர்.