துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா; அடுத்து பதவிக்கு வருவது யார்?
அரசின் நம்பிக்கையை பெற்றுள்ள அவர், அந்த பதவிக்கு வருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.;
புதுடெல்லி,
இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுபற்றி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ராஜினாமா கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.
அதில், பதவி காலத்தில் இந்திய ஜனாதிபதி அளித்த உறுதியான ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிரதமருக்கும், மந்திரிகள் குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
2022-ம் ஆண்டில், தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டார். அவர் 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். அவருடைய பதவி காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில், 3 ஆண்டு காலம் பதவியில் நீடித்து வந்த அவர் திடீரென நேற்று மாலை ராஜினாமா முடிவை அறிவித்து உள்ளார். இது பா.ஜ.க. மட்டுமின்றி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் காரணங்களுக்காக பழி வாங்கப்படுகிறாரா? என எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பியுள்ளது.
ஆனால், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என தன்கர் கூறுகிறார். இதனால், அடுத்த மாநிலங்களவை தலைவராக வருவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த சூழலில், அவருடைய ராஜினாமா அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறும்போது, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சர்ச்சைகளில் சிக்காத ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என நம்புகிறேன் என்றார்.
இந்த பதவிக்கு, பழம்பெரும் தலைவர் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்படலாம் என்றும் கூறினார். இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.பி.யான ஹரிவன்ஷ் நாராயண் சிங், மாநிலங்களவையின் துணை தலைவராகவும் உள்ளார். அவர் 2020-ம் ஆண்டு முதல் அந்த பதவியில் நீடித்து வருகிறார். அரசின் நம்பிக்கையை பெற்றுள்ள அவர், அந்த பதவிக்கு வருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.