விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
விழிஞ்ஞம் துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.;
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்துடன் இணைந்து சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் செயல்பாட்டுக்கு வந்த இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் விழிஞ்ஞம் துறைமுகத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, காலை 11.33 மணிக்கு விழிஞ்ஞம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த விழாவில் கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்-மந்திரி பினராயி விஜயன், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழிஞ்ஞம் துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த துறைமுகம், சர்வதேச வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.