கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு - ஜெகன் மீது வழக்குப்பதிவு
கார் ஓட்டுநர் ரமண ரெட்டி கைதுசெய்யப்பட்டுள்ளார்.;
அமராவதி,
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பயணித்து கொண்டிருந்தார். அப்போது, அவரது கான்வாயைப் பின்தொடர்ந்த பெரும் கூட்டத்தில், செலி சிங்கையா (55) மலர்கள் தூவ முயன்றபோது தவறி விழுந்து, ஜெகனின் காரின் முன் வலது சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்தார்.
சிங்கையாவை போலீசாரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரவாளர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கும், பின்னர் குண்டூர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக குண்டூர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
முதலில், ஜெகன் கான்வாயில் ஒரு வாகனத்தில் ஏறி விழுந்ததால் சிங்கையா காயமடைந்ததாகக் கருதப்பட்டது, ஆனால், ஜெகன் பயணித்த வாகனத்தின் அடியில் அவர் நசுங்கிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள். சிங்கையாவின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த விவகாரத்தில், ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் ஓட்டுநர் ரமண ரெட்டி கைதுசெய்யப்பட்டுள்ளார்.