வாக்கு திருட்டு புகார்: ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் மீண்டும் அறிவுறுத்தல்
‘பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள் என்று ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் இணைந்து தேர்தல் கமிஷன் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்துக்கு அதிகமான போலி வாக்காளர்கள் வாக்களித்ததாக தரவுகளை வெளியிட்டார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை தவறானது எனக்கூறிய தேர்தல் கமிஷன், தவறாக சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழி ஆவணத்துடன் (பிரமாண பத்திரம்) ராகுல் காந்தி தாக்கல் செய்யுமாறு கூறியிருந்தது.ஆனால் அவ்வாறு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறிய ராகுல் காந்தி, தான் ஏற்கனவே நாடாளுமன்றத்திலேயே உறுதிமொழி எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் தேர்தல் கமிஷன் ராகுல் காந்தியை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர், ‘ராகுல் காந்தி விதிகளுக்கு உட்பட்டு உறுதிமொழி ஆவணத்தை வழங்க வேண்டும் அல்லது தனது பொய் குற்றச்சாட்டுகளுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என தெரிவித்தார்.