தலைநகரில் ஆம் ஆத்மி கட்சிக்கு தலை குனிவு ஏன்?
ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் போட்டியிட்ட போதும் அதில் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது;
டெல்லி,
ஊழலுக்கு எதிரான அமைப்பு நடத்தி வந்த அரவிந்த் கெஜ்ரிவால் , ஆம் ஆத்மி கட்சி மூலம் தீவிர அரசியலில் நுழைந்தார். ஊழலை துடைப்பத்தால் துடைத்து எறிவோம் என்ற தார்பரியத்தில் வந்த அக்கட்சி கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தலைநகர் டெல்லியில் ஆட்சி செய்து வந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தாலும், தலைநகரான டெல்லியில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியாத நிலையே தொடர்ந்தது. கடந்த 11 ஆண்டுகளாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்து வந்த நிலையில், அதற்கு முந்தைய 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. அதாவது 1993 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவால் டெல்லியில் வெற்றி கொடி நாட்ட முடியவில்லை. இதற்கு மத்தியில் கடந்த ஆண்டு டெல்லி அரசியலில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டது.
முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தபோது மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போதும் தொடர்ந்து முதல் மந்திரியாக செயல்பட்டு வந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி காலத்தில் பஸ்ஸில் இலவச பயணம் என்பதுடன் தண்ணீர் மற்றும் மின்சாரம் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டங்கள் ஏழை மக்களுக்கு பெரிதும் பயன் அளிக்கும் வகையில் இருந்தது. ஆனால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் டெல்லியில் வசிக்கும் நடுத்தர மக்களுக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை.
சிறையிலிருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவாலும் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டெல்லி முதல் மந்திரியாக அதிஷி இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி டெல்லி சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக புதிய யுத்தியை கையாண்டது. அதாவது ஊழலுக்கு எதிராக வந்த ஆம் ஆத்மி கட்சி மீது மதுபான கொள்கை முறைகேட்டினை வைத்து குற்றம் சுமத்தியது. இது நடுத்தர மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம். அது தேர்தல் முடிவிலும் எதிரொலித்து இருக்கிறது. டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 68 இடங்களில் போட்டியிட்ட பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் போட்டியிட்ட போதும் அதில் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிர்ச்சி அளிக்கும் வகையில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி அடைந்தனர். தேசிய கட்சியான காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அந்தக் கட்சிக்கு ஒரே ஆறுதலாக கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் இரண்டு சதவீதம் வாக்குகள் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் தலைமையிலான ,'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஆம் ஆத்மி கட்சி, டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து களம் கண்டது அக்கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 42. 95 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6.5 சதவீதம் வாக்குகளை கைப்பற்றியுள்ளது. இந்த இரண்டு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் 49.45 சதவீதம் வாக்குகள் கிடைத்து இருக்கும். பாஜக வாங்கிய 47.22 சதவீதம் வாக்குகளை விட இது அதிகம் என்பதால், டெல்லி சட்டசபை தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கும். இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சி ஆக இருந்து ஆம் ஆத்மி கட்சி எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்துத்தான் 2030 ஆம் ஆண்டு தேர்தல் அமையும்.