மணிப்பூர் கலவரத்தில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான பெண் - நீதிக்காக காத்திருந்து உயிரிழந்த சோகம்
பாலியல் பலாத்காரத்தின்போது ஏற்பட்ட காயங்களால், இளம்பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்துள்ளது.;
இம்பால்,
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அரங்கேற்றிய கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் வீடியோக்களாக வெளியாகி நாட்டையே உலுக்கியது.
குறிப்பாக மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்கள் தேசத்தை தலைகுனிய வைத்தன. மாநில பா.ஜ.க. அரசு, கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த கலவரத்தின்போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் வாக்குமூலங்கள் பதைபதைக்க வைத்தன. அவ்வாறு 2023-ம் ஆண்டு மே 15-ந்தேதி, குக்கி இனத்தைச் சேர்ந்த் 18 வயது இளம்பெண் ஒருவர், மெய்தி இனத்தைச் சேர்ந்த நபர்கள் சிலரால் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
அந்த பெண்ணை கடத்திச் சென்றவர்கள் அவரை கொலை செய்யும் முயற்சியில் மலைக்குன்றின் மேல் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டுள்ளனர். பின்னர் ஆட்டோ டிரைவர் ஒருவர், உயிருக்கு போராடிய நிலையில் இருந்த இளம்பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2023-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி காங்போக்பி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் போலீசார் இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இருப்பினும், குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து நீதிக்காக காத்துக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் பாலியல் பலாத்காரத்தின்போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக, இளம்பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட அவர் வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 8-ந்தேதி, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது. அந்த பெண்ணை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், அடுத்த நாள் அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து உயிரிழந்த பெண்ணின் தாயார் கூறுகையில், “எனக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசைதான் மிச்சம் உள்ளது. எனது மகளை இப்படி செய்தவர்கள் தண்டிக்கப்படுவதைப் பார்க்க வேண்டும். அந்த ஆண்கள் யார் என்று எனக்கு தெரிய வேண்டும். என் மகள் இல்லாமல் நான் வாடப் போகிறேன்” என்று தெரிவித்தார்.