அவதூறு வழக்கு; கோர்ட்டில் ஆஜராகாத ராகுல் காந்தி - விசாரணை ஒத்திவைப்பு

ராகுல் காந்தியை இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.;

Update:2026-01-19 15:28 IST

லக்னோ,

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அப்போதைய பா.ஜ.க. தலைவராக இருந்த அமித்ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி, உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜரானார். அப்போது ராகுல் காந்திக்கு தலா ரூ.25,000 மதிப்புள்ள இரண்டு பிணைகளில் நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

தொடர்ந்து 2024-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி, கோர்ட்டில் ஆஜரான ராகுல் காந்தி, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இந்த வழக்கு அரசியல் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதையடுத்து புகார்தாரரின் தரப்பு ஆதாரங்களை சமர்ப்பிக்க கோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 6-ந்தேதி, ராம் சந்திர துபே என்ற சாட்சியிடம் கோர்ட்டில் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்ந்து ராகுல் காந்தியை 19-ந்தேதி(இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இன்று வழக்கு விசாரணையின்போது ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் தற்போது கேரளாவில் இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்