கள்ளக்காதலியை கொன்று உடலை எரித்து பெட்டியில் எடுத்து சென்ற முன்னாள் ரெயில்வே ஊழியர் - உ.பி.யில் பரபரப்பு
போலீசார் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் சாம்பலும், சில எலும்புகளும் மட்டுமே இருந்தன.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ. பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி(வயது 32). இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், 62 வயதான ராம் சிங் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
மேலும் லேகர் கோன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பிரீத்தியும், ராம் சிங்கும் அடிக்கடி தங்கி வந்துள்ளனர். ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரான ராம் சிங்கிற்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ள நிலையில், 3-வதாக பிரீத்தியுடன் அவர் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், ராம் சிங்கிடம் பிரீத்தி அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராம் சிங், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரீத்தியை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் பிரீத்தியின் உடலை துண்டு துண்டாக வெட்டி அதை ஒரு பெரிய இரும்பு பெட்டிக்குள் வைத்த அவர், அதன் மீது விறகுகளை குவித்து தீ வைத்துள்ளார்.
இதில் பிரீத்தியின் உடல் பாகங்கள் எரிந்து சாம்பலாகின. இதையடுத்து எரிந்த உடல் பாகங்களை அப்புறப்படுத்த முடிவு செய்த ராம் சிங், ஒரு லோடு ஆட்டோவை அழைத்துள்ளார். பின்னர் அந்த இரும்பு பெட்டியை பூட்டி ஆட்டோவில் ஏற்றிய அவர், அதனை சிப்ரி பஜார் பகுதிக்கு கொண்டு சென்றார்.
இதற்கிடையில் ஆட்டோ டிரைவருக்கு ராம் சிங்கின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் பூட்டப்பட்ட இரும்பு பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அந்த ஆட்டோ டிரைவர் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த தகவலின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது ராம் சிங் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் விட்டுச் சென்ற இரும்புப் பெட்டியை போலீசார் கைப்பற்றினர். அதைத் திறந்து பார்த்தபோது அதில் சாம்பலும், சில எலும்புகளும் மட்டுமே இருந்தன. அதனை கைப்பற்றிய போலீசார், அவற்றை ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராம் சிங்கின் மனைவிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். ராம் சிங்கின் மகனுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தலைமறைவாக இருக்கும் ராம் சிங்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.