ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி; பெண் குழந்தை பிறந்தது...!

தாயும், சேயும் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-10-04 16:59 IST

சண்டிகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் இருந்து உத்தரபிரதேசத்தின் கான்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று ஜம்மு டவி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி தனது கணவருடன் கான்பூருக்கு புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில், எக்ஸ்பிரஸ் ரெயில் அரியானாவின் அம்பாலா அருகே சென்றபோது கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ரெயில் அம்பாலா காண்ட் ரெயில் நிலையம் வந்தபோது உடனடியாக கர்ப்பிணியை ரெயிலில் இருந்து கீழே இறக்கி அங்குள்ள மருத்துவ அறையில் டாக்டர்கள், செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர். இதில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, அப்பெண்ணும் , குழந்தையும் அம்பாலாவில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும், சேயும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்