மகளை வழியனுப்பி வைத்த பெண் அதே ரெயிலில் சிக்கி பலி; கணவன் கண் எதிரே பரிதாபம்
கொட்டாரக்கரை ரெயில் நிலையத்தில் மகளை வழியனுப்பி வைத்த பெண் அதே ரெயிலில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையை சேர்ந்தவர் ஷாஜி. இவருடைய மனைவி மினி (வயது42). இவர்களது மகள் நிமிஷா. இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.இந்தநிலையில் ஓணம் பண்டிகை விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த நிமிஷா நேற்று முன்தினம் மாலையில் சேலத்துக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்பி வைப்பதற்காக மினியும், ஷாஜியும் கொட்டாரக்கரை ரெயில் நிலையத்துக்கு வந்திருந்தனர்.
ரெயில் வந்தவுடன் மகளின் பேக் உள்ளிட்ட பொருட்களை வைப்பதற்காக, மினியும் ரெயிலில் ஏறினார். அவர் பொருட்களை வைத்து கொண்டிருந்த போது ரெயில் புறப்பட்டது. இதை எதிர்பார்க்காத மினி உடனே ஓடும் ரெயிலில் இருந்து இறங்கினார்.
அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே கணவர் கண் எதிரே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து வந்து மினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொட்டாரக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொட்டாரக்கரை ரெயில்வே போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகளை வழியனுப்பி வைத்த பெண் அதே ரெயிலில் சிக்கி இறந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் இருந்த அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.