அடல் சேது மேம்பாலத்தில் சேதங்களை சீரமைக்கும் பணி தொடக்கம்; ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம்
பாலத்தில் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.;
மும்பை,
மும்பை சிவ்ரியில் இருந்து ராய்காட் மாவட்டம் உரண் தாலுகாவில் உள்ள நவசேவா வரையிலான அடல் சேது மேம்பாலத்தை கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 22 கி.மீ. நீளம் கொண்ட இது இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படுகிறது. மேலும் உலக அளவில் 7-வது நீளமான பாலம் என்ற சிறப்பை பெற்று உள்ளது.
இதற்கிடையில், அடல் சேது மேம்பாலத்தில் நவி மும்பை செல்லும் பாதையில் 10.4 கி.மீ. தூரத்தில் தொடங்கி, குறிப்பாக கனரக வாகன வழித்தடத்தில் சில சேதங்கள் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம்(MMRDA) ஆய்வு நடத்தியது. தொடர்ந்து, மழைக்காலம் என்பதால் தற்காலிகமாக சீரான போக்குவரத்தை உறுதி செய்ய சிறிய அளவிலான பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் பாலத்தில் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அதோடு, பருவமழை தற்போது குறைந்துள்ள நிலையில், அடல் சேது மேம்பாலம் வாகன ஓட்டிகளுக்கு உகந்ததாக இருப்பதை உறுதி செய்வதற்காக விரிவான மறுசீரமைப்பு பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்காக அடல் சேது மேம்பாலம் முழுமையாக மூடுவதை தவிர்க்க 3 கட்டமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.