டெல்லியில் கார் வெடிப்பில் 10 பேர் பலி; பயங்கரவாதிகளின் சதிச்செயலா? சிக்கிய 2 பேர்

நாடு முழுவதும் டெல்லி, மும்பை, உ.பி., காஷ்மீர், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.;

Update:2025-11-10 21:44 IST

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் பயங்கரவாத தாக்குதலுக்கு பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின்னர், 6 மாதங்களாக தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வப்போது, உளவு தகவல்களின் அடிப்படையில் சதிச்செயல்கள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் பயங்கரவாத ஒழிப்பு படையினர் நேற்று அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் சந்தேகத்திற்குரிய வகையிலான 3 பேர் அதலாஜ் சுங்க சாவடி அருகே கைது செய்யப்பட்டனர். அவர்கள் அகமது மொஹியுதீன், ஆசாத் சுலேமான் ஷேக் மற்றும் முகமது சுஹேல் சலீம் கான் என அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 2 கிளாக் ரக கைத்துப்பாக்கிகள், பெரட்டா ரக கைத்துப்பாக்கி ஒன்று, 30 தோட்டாக்கள் மற்றும் 4 லிட்டர் ஆமணக்கு எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் 3 பேரும் ஆயுத விநியோகம் செய்தபோது பிடிபட்டனர். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த அவர்கள் சதி திட்டம் தீட்டியது விசாரணையில் இருந்து தெரிய வந்தது.

இதுதவிர, இந்திய பகுதிகளை பயங்கரவாதி ஷாம்ஷெர் தலைமையிலான லஷ்கர்-இ-தொய்பா குழு, டிரோன்கள் உதவியுடன் வான்வழியே ஆய்வு செய்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், தாக்குதலுக்கு சாத்தியப்பட்ட இடைவெளி பகுதிகளை அடையாளம் காணுதலும் நடந்துள்ளன. இதனால், வருகிற வாரங்களில் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளன என 5 நாட்களுக்கு முன் உளவு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சூழலில், நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி திட்டம் தீட்டிய 3 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, பயங்கரவாத இலக்குகள் தகர்த்து அழிக்கப்பட்டன. அது நடந்து 6 மாதங்களுக்கு பின்னர், புதிய வடிவிலான ஒருங்கிணைந்த தாக்குதல்களை மேற்கொள்ள லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவை சதி திட்டமிட்டு உள்ள அதிர்ச்சிக்குரிய தகவல்கள் சமீபத்தில் வெளிவந்தன.

இதுதொடர்பான உளவு தகவலின்படி, பயங்கரவாத குழுக்களின் ஊடுருவல், எல்லை கடந்து ஆயுத தளவாடங்களை கடத்தி கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் வழியேயான இந்த ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் சிறப்பு சேவை குழு உதவியுள்ளது. அதன் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும் கூட ஆதரவளித்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

இந்த சூழலில், கடந்த அக்டோபர் 27-ந்தேதி ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில், கடந்த வாரம் உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூரில் அடில் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் இவர் டாக்டராக பணியாற்றி வந்துள்ளார்.

இதுதொடர்பான சோதனையில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டன. அவர் அளித்த தகவலின் பேரில், அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள மற்றொரு டாக்டரான முஜாமில் ஷகீல் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, 360 கிலோ வெடிமருந்துகள், டைமர்கள் மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கி, ஒரு கேரம் கோக் ரைபிள், இரண்டு தானியங்கி துப்பாக்கிகள், 84 தோட்டாக்கள், 5 லிட்டர் ரசாயனங்கள், பேட்டரியுடன் கூடிய 20 டைமர்கள் மற்றும் 14 பைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஷகீல் டாக்டராக வேலை செய்து வருவது தெரிய வந்துள்ளது. ஷகீலை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து தப்பியோடினர்.

இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எதற்காக கார் தீப்பிடித்தது. கார் வெடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? யாருடைய கார் என்றும், எதற்காக இந்த பகுதிக்கு கார் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் மாலை வேளையில் அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் வேலை முடிந்து பலர் செல்ல கூடிய நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், சதி வேலையாக இருக்க கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்து உள்ளன. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது. இதுதவிர 24 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளின் சதிச்செயல் எதுவும் நடந்திருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சிக்கிய 2 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதுபற்றி மத்திய மந்திரி அமித்ஷாவிடம் பிரதமர் மோடி விவரங்களை கேட்டறிந்து உள்ளார். நாடு முழுவதும் டெல்லி, மும்பை, உ.பி., காஷ்மீர், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சம்பவ பகுதிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்றுள்ளனர். தேசிய பாதுகாப்பு படையினரும் சென்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்