டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி இரங்கல்

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.;

Update:2025-11-10 21:42 IST

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டை அருகே மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து அந்த கார் வெடித்து சிதறியது. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடித்த செய்தி மிகுந்த வருத்தத்தையும் கவலையையும் அளிக்கிறது. இந்த துயர விபத்தில் பல அப்பாவி உயிர்களை இழந்தது மிகுந்த துயரத்தை அளிக்கிறது.

இந்த துயரமான நேரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் நான் நிற்கிறேன். மேலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லியில் நடந்த துயரமான கார் வெடிப்புச் சம்பவத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் இதயம் இரங்குகிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்