தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 11,753 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - சமூக நலத்துறை
குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.;
கோப்புப்படம்
நாட்டில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு, குறைவான வயதில் திருமணம் செய்தால் அது குழந்தை திருமணம் என சட்டம் கூறுகிறது. நிர்ணயிக்கப்பட்ட வயதை காட்டிலும் குறைவான வயதில் திருமணம் செய்தால், குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 21 வயதுக்கு மேற்பட்ட ஆண், திருமணத்தை அனுமதித்தவர், நடத்துபவர், தடுக்க தவறியவர்கள், உறுதுணையாக இருந்தவர்கள் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம், இல்லையெனில், இரண்டு தண்டனைகளும் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், குழந்தை திருமணங்களை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், 1098 உதவி எண்கள் வாயிலாகவும் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஈரோடு, நெல்லை, பெரம்பலூர், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடப்பதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில், கூடுதல் கவனம் செலுத்தி குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு சமூக நலத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 753 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.