17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
17 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
மதுரை திருமோகூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (35 வயது). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு மானாமதுரை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். பின்னர் ராஜ்குமார், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். அந்த சிறுமியை கொடைக்கானல் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் 3 நாட்களுக்கு பிறகு போலீசார் அந்த சிறுமியை மீட்டனர். இதனையடுத்து மானாமதுரை சிப்காட் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் மற்றும் அவருக்கு உதவிய அவர்களது உறவினர்கள் ராஜா (60 வயது), செல்வம் (45 வயது) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிவகங்கையில் உள்ள போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணையின்போது செல்வம் இறந்தார். அரசு வக்கீல் தனலட்சுமி இந்த வழக்கை நடத்தினார். இந்த வழக்கில் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடந்தது. நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன், குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் ராஜா விடுதலை செய்யப்பட்டார்.