இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் இதுவரை 99.81 சதவீத கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு, 98.23 சதவீத படிவங்கள் டிஜிட்டல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் முருகனின் ஆறு படைவீடுகளில் முதன்மையானது. சட்ட போராட்டத்திற்கு பிறகும் தீபம் ஏற்ற முடியவில்லை. ஒரு புனித நாள் கொண்டாட்டத்தை வேறு நேரத்திற்கு மாற்ற முடியுமா? ஆந்திரா துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கூறியுள்ளார்.
திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் வரும் 14ம் தேதி நடைபெறும். துணை முதல்-அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார் என திமுக அறிவித்துள்ளது.
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் பல்லடத்தை சேர்ந்த ஓமனா லோகநாதன் தங்கம் வென்று அசத்தி உள்ளார். 50 வயதிற்கு மேற்பட்டோர் கலந்துகொள்ளும் இப்போட்டியில் 3 விதமான சுற்றுகளில் மொத்தம் 207.5 கிலோ பளுதூக்கி முதல் பரிசை வென்றார்.
'தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்' என்ற பெயரில் நாளை முதல் பொதுமக்களை சந்திக்கிறார் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி. 10 கோரிக்கைகளை முன்னிறுத்தி காஞ்சியில் பிரசாரம் தொடங்க உள்ளார்.
விமான நிலையத்தில் சிக்கிய பயணிகளுக்கு ஹோட்டல் வசதி, விமானம் ரத்து செய்யப்பட்டால், கட்டண தொகை திரும்பி வழங்கப்படும்.இன்று நள்ளிரவு முதல் விமான சேவை படிப்படியாக சீராகும். பாதிப்புகளை விரைவில் சரிசெய்ய இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மழை விடுமுறையை ஈடு செய்ய சென்னையில் பள்ளிகள் நாளை செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த ரெட்டேரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால், செங்குன்றம் - மாதாவரம் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நின்ற நிலையிலும் உபரி நீர் தொடர்ந்து வெளியேறுவதால் தண்ணீர் வடியவில்லை. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.