பெரம்பூர் அருகே மின்சார ரெயில் மோதி 2 வாலிபர்கள் உயிரிழப்பு
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.;
கோப்புப்படம்
சென்னை பெரம்பூர் லோகோ ரெயில் நிலையம் - கேரேஜ் ரெயில் நிலையங்கள் இடையே நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பெரம்பூர் ரெயில்வே போலீசார், பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பலியான இருவரும், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராம்ஜித் யாதவ் (32 வயது) மற்றும் பிஜிலி யாதவ் (33 வயது) என்பதும், இவர்கள் பெரவள்ளூரில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கி, வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து பலியான இருவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்கு பிறகு இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பெரம்பூர் ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.