நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் 48,418 பேர் பயன் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறை என்பது கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-10 00:28 IST

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2-ந்தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 38 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று (அதாவது நேற்று) சென்னை, ஊட்டி தவிர்த்து 36 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. 6 மாதத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் 1,256 இடங்களில் நடத்தப்படும்.

கடந்த வாரம் நடந்த முகாமில் 44 ஆயிரத்து 418 பேர் மருத்துவ பயன் பெற்றிருந்தார்கள். இந்த வாரம் நடந்த 36 முகாம்களில் 48 ஆயிரத்து 418 பேர் பயன் பெற்றுள்ளனர். இந்த முகாம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒவ்வொரு முகாமிலும் ஆயிரக்கணக்கானோர் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது அவர்களுக்கான மருத்துவ சேவைகள் உடனடியாக வழங்கப்பட்டு மருத்துவ அறிக்கை கோப்புகள் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு இந்த மருத்துவ அறிக்கை பயன்பெறும்.

இதேபோல, ரூ.110 கோடி மதிப்பில் செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி கட்டிடம் மற்றும் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் என மொத்தம் ரூ.115 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளார். பல்லாவரம் வட்டார அரசு ஆஸ்பத்திரியில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் பல் ஆஸ்பத்திரி திறக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் துணை சுகாதார நிலையங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறை என்பது கிடையாது. டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை என்பது தொடர்ச்சியாக கூறப்படுகிற பொய்யான குற்றச்சாட்டு. வேண்டுமென்றே சிலர் இந்த பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்