போலீஸ் உயர் அதிகாரிகள் மீது பொய்புகார் கூறிய ஏட்டு பணிநீக்கம்

போலீஸ் உயர் அதிகாரிகள் மீது பொய்புகார் கூறிய ஏட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-08-05 08:14 IST

தென்காசி,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). இவர் சிவகிரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி டி.ஜி.பி. மற்றும் போலீஸ் துறை உயர் அதிகாரிகளுக்கு தபால் மூலம் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.

அதில், ''இன்ஸ்பெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்பட உயரதிகாரிகள் குறித்து அடுக்கடுக்காக புகார் தெரிவித்ததோடு பணியில் இருந்து விலகிக்கொள்வதாகவும்'' குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த கடிதத்தில் பிரபாகரன் கையெழுத்திடவில்லை. இந்த கடிதத்தை அவர் சமூக வலைதளத்திலும் வெளியிட்டதோடு, வீடியோவில் போலீஸ் உயரதிகாரிகள் குறித்து அவர் பேசியது வைரலாக பரவியது.

இதுகுறித்து முறையாக விசாரணை நடத்துமாறு துறை ரீதியாக உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, கூடுதல் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் சிவகிரி போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஏட்டு பிரபாகரன் போலீஸ் அதிகாரிகள் மீது பொய் புகார்களை தெரிவித்தது தெரியவந்தது. கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் பிரபாகரன் பல நாட்கள் வேலைக்கு வரவில்லை. விடுப்பு குறித்து எவ்வித முறையான தகவலும் அளிக்கவில்லை.

கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி திடீரென சிவகிரி போலீஸ் நிலையத்துக்கு வந்த பிரபாகரன் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். பணிக்கு வராத நாட்களில், அவர் வெளிநாடு சென்றது தெரியவந்தது. போலீசார் இதுகுறித்த விசாரணை அறிக்கையை கடந்த ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் தாக்கல் செய்தனர்.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், போலீஸ் ஏட்டு பிரபாகரனை பணியில் இருந்து நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். பணிநீக்க ஆணையை பிரபாகரனிடம் வழங்கியபோது அதனை வாங்கமாட்டேன் என அடம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் உத்தரவு கடிதத்தை பெற்றுக்கொண்டு பிரபாகரன் அங்கிருந்து சென்று விட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்