பனிமூட்டத்தால் டெல்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் விபத்து - ஒருவர் பலி, 24 பேர் காயம்

3 பஸ்கர்கள், ஒரு லாரி மற்றும் பல்வேறு கார்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளன.;

Update:2026-01-18 18:32 IST

லக்னோ,

இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களிலும் அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள டெல்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில், பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

3 பஸ்கர்கள், ஒரு லாரி மற்றும் பல்வேறு கார்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளன. கோரக்பூரில் இருந்து மீரட் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று லாரியின் மீது மோதியதைத் தொடர்ந்து, பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்றாக மோதி நின்றதால் இந்த விபத்து அரங்கேறியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. சிலர் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் சில மணி நேரங்களுக்குப் பின்னர் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்