ஆம்னி பஸ்களில் மதுரையில் இருந்து சென்னைக்கு 6 ஆயிரம் வரை கட்டணம் ;பயணிகள் அதிர்ச்சி
பொங்கல் பண்டிகை முடிந்துள்ளதால், சொந்த ஊர் சென்ற மக்கள் தற்போது சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.;
கோப்பு படம்
சென்னை,
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த 9-ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகை முடிந்துள்ளதால், சொந்த ஊர் சென்ற மக்கள் தற்போது சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் மற்றும் பஸ்களில் டிக்கெட் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
தனியார் ஆம்னி பஸ்களில் செல்லலாம் என நினைத்து டிக்கெட் புக் செய்ய சென்ற பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. அதாவது, மதுரையிலிருந்து சென்னை திரும்பும் சில ஆம்னி பஸ்களில் டிக்கெட் விலையாக ரூ.6 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டினர். மேலும், சில ஆம்னி பஸ்களில் ஒரு டிக்கெட் விலை ரூ.4,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.