முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு பின்னோக்கி செல்கிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக பி.எச்.டி. முடிக்கிறார்கள் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.;

Update:2026-01-18 17:17 IST

சென்னை,

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று ஐஐடி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ’பான் ஐஐடி டெக்4பாரத்’ என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

இந்தியாவில் ஐஐடிகள் 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. ஆனாலும், கல்வியின் மூலமாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் ஆட்களைதான் தயார் செய்து வந்துள்ளோம். இனிமேல் நாம், நாட்டிற்குப் பயன்படும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும். இது ஒருபுறம் என்றால் தமிழ்நாட்டினுடைய நிலைதான், தற்போது வருத்தமளிப்பதாக இருக்கிறது.

தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னேறிய நிலையில் உள்ளது. ஜி.இ.ஆர் அடிப்படையில் பார்த்தால், உயர்கல்வி சேருபவர்கள் தமிழ்நாட்டில் 50 சதவீதம் அளவுக்கு உள்ளது. இது இந்திய சராசரியைவிட மிக அதிகம். தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் பொறியாளர்கள் படித்துவிட்டு வெளியே வருகிறார்கள். இந்தியாவின் மொத்த பொறியியல் மாணவர்கள் எண்ணிக்கையில் 18 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்கள்.

அதேபோல, நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக பி.எச்.டி. முடிக்கிறார்கள். ஆனால், கல்வியில் எத்தனை சாதனைகளை செய்தாலும் முதலீடுகளை ஈர்ப்பதை பொறுத்தவரையில் தமிழ்நாடு பின்னோக்கிச் சென்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 30 சதவீதம் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்தன. ஆனால், இப்போது 5 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது‌. குறு, சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சியிலும் பின்னோக்கி இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் என்பது போதுமான அளவில் இல்லை என்பதால்தான்.

அதாவது, தமிழ்நாட்டில் இருந்து பள்ளிகளில் படிக்கக்கூடிய 70 சதவீதம் மாணவர்கள் அறிவியல் படிப்பிலும், 30 சதவீதம் மாணவர்கள் கலை படிப்பிலும் சேர்ந்து படிக்கிறார்கள். அதேவேளையில், பள்ளியை முடித்து கல்லூரி சேரும்போது அதற்கு நேர்மாறாக 70 சதவீதம் பேர் கலைசார்ந்த படிப்புகளிலும், 30 சதவீதம் பேர் அறிவியல் சார்ந்த படிப்புகளிலும் சேர்கிறார்கள். இங்கேயே பிரச்சினை தொடங்கி விடுகிறது.

மேலும், உயர் நிலையில் படிக்கும் பள்ளி மாணவர்கள்கூட 2ஆம் வகுப்பு பாடங்களை படிக்க முடியாத நிலை உள்ளனர். அதன்பிறகு, பார்த்தால் பொறியியல் கல்வி முடித்த மாணவர்கள் தகுதி பொறியாளருக்கான தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பொறியியல் கல்லூரிகளில் 45 சதவீதம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அப்படியே பணியாற்றும் ஆசிரியர்களில் பலரும் போதிய தகுதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் அங்கு தரமான கல்வி என்பது இல்லாத நிலையே இருக்கிறது. இதன் காரணமாகவே, தரமான பொறியாளர்களை உருவாக்க முடியவில்லை. இந்தியாவிலேயே, மாநிலப் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது. ஆனால் இங்கு கல்வியில் தரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மாநிலப் பல்கலைக்கழகங்களை முன்னேற்ற வேண்டும். தமிழகத்தின் கல்வி தரமானதாக மாறினால்தான் சிறந்த பொறியாளர்களையும், சிறந்த மாணவர்களையும் உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்