எட்டயபுரம் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மே 23 வரை மாணவியர் சேர்க்கை: கலெக்டர் தகவல்

எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026-ம் கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை இணையதளம் மூலம் மே 23 வரை நடைபெற உள்ளது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.;

Update:2025-05-21 13:57 IST

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026-ம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாமாண்டு/முதலாமாண்டு (முழு நேரம்) மாணவியர் சேர்க்கை https://www.tnpoly.in என்ற இணையதள முகவரியில் 7.5.2025 முதல் 23.5.2025 வரை விண்ணப்பிக்கலாம். இதில் நேரடி இரண்டாமாண்டு மாணவியர் சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் + ஐ.டி.ஐ. மதிப்பெண் சான்றிதழ், சாதிசான்றிதழ் மற்றும் விண்ணப்பத்தார் புகைப்படம் ஆகியவற்றை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவியர்கள் முதலாமாண்டு சேர்க்கை பெறலாம். 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், சிறப்பு பிரிவினர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் மற்றும் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.150 ஆகும். SC/ST மாணவியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மற்ற மாணவிகள் விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இணையதள வங்கி சேவை மூலம் செலுத்தலாம்.

இக்கல்லூரியின் குறியீட்டு எண் 178 ஆகும். இக்கல்லூரியில் மாணவியர்களுக்கு MECH, EEE, ECE, ICE, CE, G.TECH மற்றும் RENEWABLE ENERGY ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவிகள் சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இக்கல்லூரி TNEA பொறியியல் மாணவர்கள் சேர்க்கை (TFC.103) சேவை மையமாக உள்ளதால் நேரடியாக கல்லூரிக்கு வந்து விண்ணப்பிக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9715526364, 9486195488, 04632-271238 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்