15 நாட்களுக்கு பிறகு மீண்டும் கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தது

கண்டலேறு அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் 2500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.;

Update:2025-05-22 12:33 IST

கோப்புப்படம்

சென்னை,

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 5ம்தேதி பிற்பகல் 1 மணிக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லைக்கு 3 அல்லது 4 நாட்களில் வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஆந்திர பகுதியில் சீரமைக்கப்பட்ட கால்வாயில் தண்ணீர் அதிகளவு வந்தால் மீண்டும் கால்வாய் சேதம் அடையும் என்பதால் 500 கன அடி மட்டுமே திறக்கப்பட்டது.

ஆந்திர விவசாயிகள், குழாய் மூலம் தண்ணீரை உறிஞ்சுவதாலும் தண்ணீர் அளவு குறைந்ததாலும் 15 நாட்களுக்கு பிறகு நேற்று காலை 7 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வந்தது. இந்த தண்ணீரை நீர்வளத்துறை செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் ராஜா சிதம்பரம், உதவி பொறியாளர்கள் சதீஷ் குமார், பரத் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.

கண்டலேறு அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் 2500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது ஜீரோ பாயிண்டில் 70 கன அடியாக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை பூண்டி ஏரிக்கு நீர் வந்தடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்