அங்கன்வாடி ஆசிரியையிடம் ரூ.8 லட்சம் மோசடி
பணம் கொடுத்தால், அழகுக்கலை பயிற்சி நிலைய பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாகவும், லாபத்தில் ஒரு பங்கு தருவதாகவும் ஆசிரியையிடம் தெரிவித்தனர்..;
மதுரை,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வளையங்குளம் கிராமம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இந்திரா காந்தி (வயது 53). இவர் அங்கன்வாடி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் கவிதா, திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் உள்ள தனியார் அழகுக்கலை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். இதற்கிடையே அழகுக்கலை பயிற்சி நிலைய உரிமையாளர் முத்துலட்சுமிக்கும், கவிதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு தோழிகள் ஆகினர். மேலும் கவிதாவின் வீட்டிற்கு சென்றும் அவரது தாய் இந்திராகாந்தியுடன் பழகியுள்ளார்.
இந்நிலையில் முத்துலட்சுமி தனது அழகுக்கலை பயிற்சி மையத்தை விரிவுபடுத்தப்போவதாகவும், அதற்கு ரூ.8 லட்சம் தேவைப்படுகிறது எனவும் கூறினாராம். மேலும் ரூ.8 லட்சம் வழங்கினால் கவிதாவை பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாகவும், லாபத்தில் ஒரு பங்கு தருவதாகவும் இந்திராகாந்தியிடம், முத்துலட்சுமி தெரிவித்தாராம். இதை நம்பிய இந்திராகாந்தி ரூ.8 லட்சத்து 9 ஆயிரத்தை வழங்கினார்.
ஆனால் தற்போது வரை முத்துலட்சுமி கூறியது போல கவிதாவை பங்குதாரராக சேர்க்கவில்லை எனவும், வருமானத்தில் வரும் லாப பங்கும் கொடுக்கவில்லை எனவும், கொடுத்த பணத்தை திரும்ப தரவில்லை எனவும் கூறி அவர் திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் முத்துலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.