சென்னை விமான நிலையத்தில் 19 விமான சேவைகள் ரத்து; பயணிகள் பரிதவிப்பு
விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.;
சென்னை,
டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நேற்று கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் டெல்லி விமான நிலையத்தில், விமானங்கள் தரை இறங்க முடியாமல் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கவுகாத்தி, வாரணாசி, இந்தூர், புவனேஸ்வர், கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 12 ஏர் இந்தியா, இண்டிகோ புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோன்று சென்னைக்கு வர வேண்டிய டெல்லி, கொல்கத்தா, வாரணாசி, புவனேஸ்வர், ஐதராபாத் உள்ளிட்ட 7 ஏர் இந்தியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில், 19 விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. இதனால் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். எனினும், விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.