2026-27-ம் ஆண்டுக்குள் அனைத்து ரெயில் பாதைகளும் மின்மயம்- தெற்கு ரெயில்வே தகவல்

தெற்கு ரெயில்வே மண்டலத்துக்குட்பட்ட 5,116 கி.மீ. ரெயில் பாதையில் 4,995 கி.மீ. பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.;

Update:2025-12-16 21:46 IST

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் உள்ள ரெயில் பாதைகள் அனைத்தும் 2026-27-ம் ஆண்டுக்குள் மின்மயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய ரெயில்வே துறையில் தெற்கு ரெயில்வே மண்டலத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் பயன்படுத்தப்படாத வகையில் ரெயில் பாதைகள் மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி தெற்கு ரெயில்வே மண்டலத்துக்குட்பட்ட 5,116 கி.மீ. ரெயில் பாதையில் 4,995 கி.மீ. பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதில், சென்னை, மதுரை, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டங்கள் முழுமையாக ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. சேலத்தில் 98 சதவீதமும், திருச்சியில் 88 சதவீதமும் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே யுனெஸ்கோ பாரம்பரிய ரெயில் பாதையாக அறிவித்திருப்பதாலும், எர்ணாகுளம்-கொச்சி துறைமுகம் இடையே கடற்படை பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளாலும் ரெயில்பாதை மின்மயமாக்கல் நடைபெறவில்லை. தற்போது திருச்சி கோட்டத்தில் திருப்பாதிரிப்புலியூர்- பட்டுக்கோட்டை மற்றும் காரைக்கால் இடையே 120 கி.மீட்டருக்கு மின்மயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது. சேலம் கோட்டத்தில் சின்னசேலம்-பொற்படாக்குறிச்சி இடையே 12 கிலோ மீட்டருக்கு மின்மயமாக்கல் பணியும் நடைபெற்று வருகிறது. எனவே வருகிற 2026-27 -ம் ஆண்டுக்குள் தெற்கு ரயில்வேயில் முழுவதும் உள்ள ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்