ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற வீராங்கனைக்கு ஊக்கத்தொகை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்
சீனாவில் நடைபெற்ற போட்டியில், இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சீனாவில் நடைபெற்ற பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் வீராங்கனை எஸ்.ஆர். தீக்ஷாவுக்கு ரூ. 5 லட்சத்திற்கான ஊக்கத்தொகை காசோலையை வழங்கினார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றார். விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்து பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்து வருகின்றார்.
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (Elite) திட்டத்தின்கீழ் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை 25 லட்சம் ரூபாயை 30 லட்சம் ரூபாயாக உயர்த்தியதோடு இத்திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை 12 லிருந்து 50 ஆக உயர்த்தியுள்ளார்.
மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெறுவதற்கான ஊக்குவிப்பு (MIMS) திட்டத்தின் கீழ் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்து நிதியுதவியை 10 லட்சம் ரூபாயிலிருந்து இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தியதோடு, தற்போது பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 125 ஆக உயர்த்தியுள்ளார்.
அதேபோல், சாம்பியன் டெவலப்மெண்ட் திட்டத்தின் (CDS) கீழ் பயன்பெறும் 20 வயதிற்குட்பட்டோர் பிரிவு விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 100 லிருந்து 200 ஆக உயர்த்தியுள்ளார். மேலும் இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை 2 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்தி வழங்கி வருகின்றார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவும், வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறவும், அதிநவீன உயர்தர விளையாட்டு உபகரணங்களை வாங்கவும், தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை உருவாக்கி நிதியுதவி அளித்து வருகின்றார். மேலும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையை வழங்கி வருகின்றார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட விளையாட்டு அரங்கங்கள், உலக தரத்திலான உள் அரங்க விளையாட்டு மைதானங்கள், முதல்-அமைச்சர் சிறிய விளையாட்டு அரங்கங்கள், ஒலிம்பிக் தரத்திலான ஹாக்கி மைதானங்கள், விளையாட்டு வீரர்கள் உலகத் தரத்திலான பயிற்சி பெறுவதற்காக நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம், நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள கூடை பந்து, வாலிபால் பந்து மைதானங்களில் தானியங்கி முறையில் பந்து எறியும் அதிநவீன இயந்திரங்கள் என விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகின்றார்.
செஸ் ஒலிம்பியாட், ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை, கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, ஆசிய அலைச்சறுக்குப் போட்டி, சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2025 போட்டி, இரவு நேர தெரு கார் பந்தயம், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான போட்டிகள், லட்சகணக்கான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் என தொடர்ந்து சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளை நடத்தி வருகின்றார்.
இவ்வாறு, தமிழ்நாட்டில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவது, விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதால் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்களை குவித்து முதல்-அமைச்சரின் கனவை நிறைவேற்றி வருகின்றனர்.
கடந்த ஒருவார காலமாக, செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர், பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில், கபடி, தடகளப் போட்டிகள், பளுதூக்கும் போட்டி, நான்காவது தெற்காசிய சீனியர் தடகளப் போட்டிகள், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் போட்டி என தொடர்ந்து, தினந்தோறும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
அதனடிப்படையில், 2025 அக்டோபர் 21 முதல் 26 வரை சீனாவில் நடைபெற்ற பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், ஒற்றையர் பிரிவில் இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாம்பியன்ஸ் மேம்பாட்டுத் திட்ட (CDS) திருவள்ளூர் மாவட்ட வீராங்கனை எஸ்.ஆர். தீக்ஷாவுக்கு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (31.10.2025) வாழ்த்து தெரிவித்து, 5,00,000 ரூபாய்க்கான ஊக்கத்தொகை காசோலையை வழங்கினார்.
இந்நிகழ்வில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, பயிற்சியாளர், பெற்றோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.