ஈரோடு: சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்; வனத்துறையினர் எச்சரிக்கை

வாகனத்தின் சத்தம் கேட்டதும் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது;

Update:2025-12-18 20:20 IST

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது தமிழகம்–கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்–மைசூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.இந்நிலையில், இரவு நேரத்தில் சத்தியமங்கலம்–மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

வாகனத்தில் சென்ற நபர்கள் அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். வாகனத்தின் சத்தம் கேட்டதும் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஆசனூர் போகும் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மைசூரு–சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருகிறது.

எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். வனவிலங்குகளை கண்டால் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்