ஆயுதபூஜை விடுமுறை: சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.;

Update:2025-09-30 14:05 IST

சென்னை,

ஆயுதபூஜை தொடர் விடுமுறையினை முன்னிட்டு, முதல்-அமைச்சர் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது பஸ்சினை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்களிடம் பஸ்சை மிகவும் கவனமுடன் இயக்கி பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என கணிவுடன் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, பஸ்சில் பயணம் மேற்கொள்ளும் பயணியிடம் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து கேட்டறிந்தார்.

ஆயுதபூஜை தொடர் விடுமுறையினை முன்னிட்டு, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பஸ்களுடன், 26.09.2025 அன்று 450 சிறப்பு பஸ்களும், 27.09.2025 அன்று 696 சிறப்பு பஸ்களும், 29.09.2025 அன்று 194 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதன் மூலமாக 7,616 பஸ்களில் 3,80,800 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பணம் செய்துள்ளனர்.

மேலும், இன்று (30.09.2025), தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன், 1,310 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்பதிவு விவரம்:-

ஆயுதபூஜை தொடர் விடுமுறையினை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து அரசு பஸ்களில் பயணம் செய்ய ஒட்டுமொத்தமாக 50,913 பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள 26,013 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்