மயங்கி விழுந்த தாய் யானையை விட்டு பிரியாமல் குட்டி பாசப்போராட்டம்
சுமார் 8 மணி நேர சிகிச்சைக்கு பிறகு, தாய் யானை கண் விழித்தது.;
கொடைக்கானல்,
கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராம பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் முகாமிட்டு வருகின்றன. இந்த நிலையில் கொடைக்கானல் தாலுகா, வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அளத்துறை அடுத்த கணேசபுரம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் பெண் யானை ஒன்று மயங்கி விழுந்து கிடந்தது. அதன் அருகே குட்டி யானை நின்று கொண்டிருந்தது. இதனைக் கண்ட தோட்டத்து உரிமையாளர் செல்வம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் குழுவினர் மருத்துவ உபகரணங்களுடன் அங்கு வந்தனர். மயங்கி கிடந்த பெண் யானை அருகே சுமார் 3 வயது உடைய குட்டி ஆண் யானை நின்று கொண்டிருந்தது. அந்த குட்டி யானை தனது தாயை யாரும் நெருங்க விடாதவாறு அனைவரையும் முட்டுவது போல் மிரட்டியபடி பாசப்போராட்டம் நடத்தியது. இதனையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஒலி எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும் குட்டி யானையை விரட்டினர். பின்னர் மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர். 75 குளுக்கோஸ் பாட்டில்கள், ஆண்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டன.
150 கிலோ உணவு
சுமார் 8 மணி நேர சிகிச்சைக்கு பிறகு, நேற்று அதிகாலையில் பெண் யானை கண் விழித்தது. இதையடுத்து அந்த யானையை ெபாக்லைன் எந்திர உதவியுடன் தூக்கி நிறுத்தினர். பின்பு அதற்கு சுமார் 150 கிலோ உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து உடல்நலம் தேறிய அந்த யானை நேற்று காலை சுமார் 6 மணி அளவில் வனப்பகுதிக்குள் சென்றது. அதனுடன் குட்டி யானையும் சேர்ந்து கொண்டது. துரிதமாக பல்வேறு பகுதிகளில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு கூட்டு சிகிச்சை மேற்கொண்டதன் அடிப்படையில் யானை உயிர் பிழைத்தது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை சுமார் 55 வயது உடையது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குட்டி ஈன்றுள்ளது. போதிய சத்துகள் இல்லாததால் திடீரென உடல்நிலை பாதித்து மயங்கி விழுந்துள்ளது. தற்போது யானை உடல்நிலை தேறி உள்ளது. இருப்பினும் தொடர்ந்து வனப்பகுதியில் அதனை கண்காணிப்போம்” என்றனர்.