பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை - அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட தகவல்
மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 30-ந்தேதி வரை செயல்படும் என கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மற்றும் எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை இணையதள விண்ணப்பப் பதிவு 30-ந்தேதி வரை செயல்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆலோசனையின்படி 20.06.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26 ஆம் ஆண்டிற்கான பி.எட். மாணவர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன. இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து பயில ஏதுவாக இணையதள விண்ணப்பப்பதிவு வசதி இன்று (15.09.2025) முதல் 30.09.2025 வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாணவர் சேர்க்கைக்கான கூடுதல் விவரங்களை www.lwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல், எம்.எட். பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்ந்து பயில ஏதுவாக மாணவர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி 30.09.2025 வரை செயல்படும். விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.