பீலா வெங்கடேசன் மறைவு - அன்புமணி ராமதாஸ் இரங்கல்
பீலா வெங்கடேசன் தனது வகுப்புத் தோழர் என்பதை அன்புமணி ராமதாஸ் நினைவு கூர்ந்துள்ளார்.;
சென்னை,
தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (வயது 55). ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-
“தமிழ்நாடு எரிசக்தித்துறை செயலாளராக பணியாற்றி வந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மருத்துவர் பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மருத்துவர் பீலா வெங்கடேசன் அவரது பதவிக்காலத்தில் வகித்த அனைத்துப் பொறுப்புகளையும் திறம்பட நிர்வகித்தவர். புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியில் எனது வகுப்புத் தோழர். நல்ல நண்பர். கல்லூரிக் காலங்களில் இருந்தே எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர். தமிழக அரசு நிர்வாகத்தில் உயர்பதவிகளுக்கு வந்திருக்க வேண்டியவர் இளம் வயதில் காலமானது வருத்தமளிக்கிறது.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பீலா வெங்கடேசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.