விளையாடி கொண்டிருந்தபோது பாம்பு கடித்து சிறுவன் பலி

விளையாடி கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2025-03-09 05:08 IST

பெருந்துறை அருகே உள்ள கருக்கங்காட்டூரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மகன் கவுதம் (வயது 10). அப்பகுதியில் அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில் கவுதம் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டு முடிந்ததும் மாலையில் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் விளையாடுவதற்காக அருகே உள்ள காலி இடத்துக்கு சென்றான். அங்கு அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுவனுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்குள்ள புதர் மறைவில் இருந்து ஊர்ந்து வந்த விஷப்பாம்பு திடீரென கவுதமின் காலை கடித்தது.

இதனால் அவன் வலியால் அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு அவனுடைய பெற்றோர் ஓடி வந்தனர். மகனை பாம்பு கடித்ததை கண்டு பதறினர். உடனே அவனை தூக்கிக்கொண்டு பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கவுதம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாம்பு கடித்து சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்