திரைப்பட தயாரிப்பாளரிடம் மிளகு வாங்கி லட்சக்கணக்கில் மோசடி வியாபாரி கைது
மலையாள திரைப்பட தயாரிப்பாளரிடம் மிளகு வாங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.;
கோவை,
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே கடவந்தரா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீலால் (வயது 60). மலையாள திரைப்பட தயாரிப்பாளர். இவர், மிளகு மொத்த வியாபாரமும் செய்து வந்தார். இவர் மிளகு விற்பனை செய்வதை அறிந்து, கோவையை சேர்ந்த ஒருவர், ஸ்ரீலாலை தொடர்பு கொண்டார்.
அப்போது, தான் வியாபாரம் செய்து வருவதால் 5 ஆயிரம் கிலோ மிளகு தேவைப்படுகிறது. எனவே தனது முகவரிக்கு மிளகு மாதிரிகளை அனுப்பி வையுங்கள் என்று கூறினார். அதன்படி ஸ்ரீலால், மிளகு மாதிரிகளை அனுப்பினார்.
அதன்பிறகு ஸ்ரீலாலை, சியா என்ற பெண் சந்தித்து, தன்னை குறிப்பிட்ட நிறுவனத்தின் மேலாளர் அக்ரம் ஜிந்தா அனுப்பி வைத்ததாகவும், நீங்கள் அனுப்பிய மிளகு நன்றாக இருப்பதால் 10 ஆயிரம் கிலோ மிளகு வேண்டும் என்றார்.
அதற்கு அவர் ஒரு கிலோ மிளகு ரூ.783 என்பதால் 10 ஆயிரம் கிலோவுக்கு ரூ.78 லட்சத்து 30 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஸ்ரீலால் முதற்கட்டமாக 3,500 கிலோ மிளகை அக்ரம் ஜிந்தாவிடம் நேரடியாக கொடுத்துள்ளார்.
அதை வாங்கியதும் அவர் ரூ.10 லட்சம் கொடுத்து விட்டு மீதி பணத்தை பிறகு தருவதாக கூறினார். ஆனால் அவர் சொன்னபடி பணத்தை கொடுக்கவில்லை. இதுதொடர்பாக ஸ்ரீலால் விசாரித்தபோது அக்ரம் ஜிந்தாவின் உண்மையான பெயர் அபுதாகிர் என்பதும், அவர் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயரை மாற்றி மிளகு வாங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீலால் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபுதாகிரை கைது செய்தனர். விசாரணையில் அபுதாகிர் இதுபோல் பலரிடம் மோசடி செய்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.