ரூ.350 கோடி மதிப்பீட்டில் சென்ட்ரல் கோபுர கட்டடம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை சென்ட்ரல் பகுதியிலுள்ள மத்திய சதுக்க வளாகத்தில் அமைக்கப்படவுள்ள சென்ட்ரல் கோபுர கட்டடத்திற்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.;

Update:2025-02-14 12:35 IST

சென்னை,

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, சென்னை சென்ட்ரல் பகுதியிலுள்ள மத்திய சதுக்க வளாகத்தில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் சார்பில் 4 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 27 அடுக்குமாடியுடன் ரூ.350 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சென்ட்ரல் கோபுர கட்டடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

உயர்கல்வித்துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 120 கோடியே 54 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், உள்விளையாட்டு அரங்கங்கள், கழிவறைத் தொகுதிகள், விடுதிக் கட்டடம் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக அவர் திறந்து வைத்தார்.

மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 6 கோடியே 51 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம் மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கிருஷ்ணாஜிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் சிங்கவனம் - ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஆயுஷ் பிரிவு பல்நோக்குக்கூடம் மற்றும் சுகாதாரத் தொகுதிக் கட்டடம் ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்