இன்று தொடங்குகிறது சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடா்

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடா் மேயர் பிரியா தலைமையில் இன்று தொடங்குகிறது.;

Update:2025-03-19 07:43 IST

சென்னை,

2025-26-ஆம் நிதியாண்டுக்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் மேயர் பிரியா பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன்படி காலை 10 மணிக்கு மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து, மாநகராட்சி மேயர் பிரியா புதிய திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அறிவிப்புகளை வெளியிடுகிறார். இந்த பட்ஜெட்டின் மீதான விவாதம் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

2024-25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 262.52 கோடி பற்றாக்குறை இருந்தது. நிகழாண்டில் சொத்து வரி உயர்வு, தொழில் வரி உயர்வு ஆகியவற்றால் மாநகராட்சிக்கு கூடுதல் நிதி கிடைக்கும். எனவே, வரும் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பற்றாக்குறை இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இதுகுறித்து, மேயர் பிரியா கூறுகையில், "மாநகராட்சி பட்ஜெட்டில், கடந்தாண்டு போலவே இந்தாண்டும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், கால்வாய்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்