6 வாரத்துக்குள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
ஆஸ்பத்திரி இயங்கி வரும் நிலம் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது;
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், சிதம்பரத்தைச் சேர்ந்த கே.சுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''சிதம்பரத்தில் உள்ள காமராஜ் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்கள் கூட எளிதில் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரியபோது அவர்களுக்குள் எல்லை பிரச்னை நிலவி வருகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர், சிதம்பரம் நகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த ஐகோர்ட்டு, கடலூர் கலெக்டர், சிதம்பரம் நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கடலூர் கலெக்டர் சிபி ஆதித்திய செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகினர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.ஜெகந்நாத், ''அரசு ஆஸ்பத்திரி இயங்கி வரும் இடம் எந்த துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது? என்பது தற்போதும் புரியாத புதிராக உள்ளது'' என்றார்.
அதற்கு அரசு தரப்பில், ''ஆஸ்பத்திரி இயங்கி வரும் நிலம் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. அது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆஸ்பத்திரி கட்டிடம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள 56 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார்'' என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ''சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் 6 வாரத்துக்குள் அகற்றி அதுதொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.