நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு நலம் பெற விரும்புகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.;
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு (வயது 100), கடந்த 22-ந் தேதி தனது வீட்டில் திடீரென தவறி விழுந்தார். இதில், தலையில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
அதனை தொடர்ந்து, நல்லகண்ணு தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து நல்லகண்ணு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று அவரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். முன்னதாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு நலம் பெற விரும்புகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.